Sunday, 20 December 2015

ஞான தரிசனம்வெற்றுசதை மயக்கமதில்
முற்றும்மதி தானிழந்து
தக்கவிளை வெய்திவிட்டேன் நானே -தலை
சுற்றிஓய்ந்த பம்பரமாய் ஆனேன்!

வாழையிட்ட காலிடையில்
பாளமிட்ட ஓர்குழியில்
மாளுமட்டும் நான்கிடந்து தஞ்சம் -இன்று
மானம்கெட்டு விம்முகிறேன் நெஞ்சம்!

நித்திரையில் மட்டுமிங்கு
பத்தினிக ளாய்இருக்கும்
புத்திரிகள் மேனிதினம் தழுவி -இன்று
படுகுழியில் விழுந்துவிட்டேன் நழுவி!

தாளமிட்ட நெஞ்சை,கடி
வாளமிட்(டு) அடக்கிடாமல்
ஆளவிட்டுப் பார்த்திருந்தேன் நாளும் -இனி
ஓலமிட்(டு) அழு(து)என்ன லாபம்?

கொண்டுவிழி கண்டிடாமல்
கண்டுவழி சென்றிடாமல்
கண்டவழி போக்கியிரு பாதம் -வாழ்க்கை
குட்டிச்சுவர் ஆனதுதான் மீதம்!

உண்மையிலா பெண்மையதன்
மென்மையிலே ஆசைவைத்துக்
கண்மயலை வளர்ந்துவந்தேன் நாளும் -அந்தப்
புன்மையினால் வந்ததிந்த கோலம்!

தராதரங்கள் பார்த்திடாமல்
தாரமாக்கிக் கொண்டதற்குப்
பலாபலன்கள் கண்டுவிட்டேன் இங்கே -இந்தப்
பாவங்களைத் தொலைப்பதுநான் எங்கே?

தட்டுக்கெட்ட நெஞ்சமன்று
கெட்டுவிட்ட நெஞ்சமின்று
பட்டுவிட்ட பாடுகளே போதும் -இந்த
பா(டு)எந்தன் பாடைவரை வேதம்!

பாத்திரத்தின் சுத்தமது
பாலினுக்கும் என்பதுபோல்
கோத்திரத்தின் பண்பும்துளி ஒட்டும் -அதைக்
காணமறந் திட்ட(து)என் குற்றம்!

கட்டழகைக் கூட்டுமொரு
எட்டழகைக் கண்டுவந்தேன்
கற்பழகை மட்டும்காண வில்லை -அதையும்
கண்டிருந்தால் வந்திராது தொல்லை!

வேசைமகள் ஆனவளை
ஆசைமகள் ஆக்கிநெஞ்சில்
பூசைமல ராகவைத்த பாவம் -நான்
பூர்வஜென்மம் செய்தவினை ஆகும்!

யார்தகுதி என்னவென்று
பார்த்திருந்தால் பகுத்திருந்தால்
நம்தகுதி ஏன்குறையு திங்கே? -இந்த
ஞானமன்று போனதுவும் எங்கே?

தாசிகுலம் வந்தவளை
பாசிகுளம் ஆனவளை
கோவில்குளம் போலவலம் வந்து -இன்று
கண்ணீர்குளம் கட்டுகிறேன் நொந்து!

தளதளக்கும் மேனியொன்றே
தகுதியாகக் கொண்டுவிட்டேன்
குலவிளக்கை ஏற்றவரும் பெண்மை -அவள்
குலமகளா என்றுகாண வில்லை!

தேனீயான போதுமதன்
கொடுக்கினிலே விஷம்வழியும்
நானும்ரணம் பட்டதிலே இன்று -அந்த
ஞானம்தனைப் பெற்றுவிட்டேன் நன்று!

------ரௌத்திரன்

அவளுக்கு மட்டும்!சிலுவை பிரித்துப் புதியதோர் வாழ்விற்(கு)
அழகேநீ வாசல் அமைத்தாய் -வலித்துக்
கிடந்தநெஞ் சுக்கு,வரம் தந்தாய்; புளித்துக்
கிடந்தவாழ் வுக்கும் பொருள்.

வில்லொடித்த ராமன் விலாவொடித்தாள் சீதையவள்
கள்ள விழியால் கணைதொடுத்தே! -செல்லப்
பனிப்பார்வை நீவீசிப் போனாலும் என்னைத்
தணலாக வாட்டு தடி.

பாதி கொடுத்தான் பரமசிவன் பார்வதிக்கு
காதல் கலைமகளே கட்டழகே -மீதமின்றி
மொத்தமாய் நான்தந்தேன்; சாவில் தெளியாத
பித்தமே தந்தாய் எனக்கு.

விடிந்தால் நிலவை மறக்கலாம் வானம்
மடிந்தாலும் மண்மீது வாழ்வு -முடிந்தாலும்
ஆகுமோ உன்னை மறக்க? மறந்தாலே
வேகுமோ எந்தன் உடல்?

முந்தானை நீக்கியுன் மார்புக்கு மத்தியிலே
செந்தேனே செம்மலரே செப்பழகே -செந்தமிழால்
கொஞ்சிக் கவிபாடி முத்தம் பதிக்காமல்
நெஞ்சம் அடங்கா தடி.

கடல்குடித்துத் தள்ளாடும் கார்மேகம் போலுன்
மடலெடுத்த செவ்வாயின் எச்சில் -அடியழகே
நித்தம் பருகாமல் நெஞ்சம் உருகாமல்
ரத்தம் தணியா தினி.

ஒன்றையே எண்ணி உருகி ஒருமனதாய்
ஒன்றில் லயித்தல் தவமென்றால் -நன்றுதான்
தப்பல்ல ஈதும் தவமேதான்; கூடலே
ஒப்பில்லா தெய்வ சுகம்!

முன்னழகைக் கண்டுவிட்டால் மூச்சுமே முட்டுதடி
பின்னழகில் திக்குதடி பேச்சுமே! -கண்ணழகை
மீனென்றே சொன்னவன்யார் கொக்கைப்போல் அல்லவா
என்னெஞ்சைக் கொத்து கிறாய்?

பாதியில் வந்தாலும் பைந்தொடியே என்வாழ்வின்
ஆதியும் அந்தமும் நீயடி -சோதித்
திருமுகத்தைக் கண்டு கிடப்பது போலே
ஒருசுகத்தைக் கண்ட திலை.

நிலவுநீ வாராமல் என்வானில் என்றும்
பொழுது விடியாது கண்ணே! -எழுதும்
கவியெல்லாம் உந்தனது காலடிக்கே செய்தேன்
அவையெல்லாம் அர்ப்பண மே!

தேரெடுத்து வாராத தெய்வ மகளே!உன்
பேரெடுத்துச் சொன்னால் புதுச்சுகமே! -ஏறெடுத்தும்
பார்ப்பதிலை இன்னொரு பெண்ணை உனையன்றி
ஏற்பதிலை நெஞ்சம் இனி.

மீனாட்சி நீயன்றோ சொக்கனும் நானன்றோ
மானாட்சி செய்யும் மடக்கொடியே!-தேனாட்சி
செய்யும் தமிழும் எனதன்றோ? நான்பாட
வையம் வணங்கி வரும்.

சொடுக்குமே போட்டுத்தான் சொப்பனமே நெஞ்சு
துடிக்குதடி; உன்னைச் சிறையே -எடுக்காமல்
விட்டு விடுவேனோ? காத்திரு நான்தாலி
கட்டத்தான் உந்தன் கழுத்து.

-----ரௌத்திரன்

Monday, 27 April 2015

நெப்போலியன் அழுகிறான்!

(பிரான்சின் தலைமை ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற நெப்போலியன், தான் பிறந்த கோர்சிகாவின் மீதான இத்தாலி ஆக்கிரமிப்பை (இன்றைய இத்தாலியல்ல)முறியடிக்கப் படைதிரட்டி வருகிறான். ஏற்கெனவே நெப்போலியனிடம் தோற்று சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை மறந்த இத்தாலிக்கு மீண்டும் புத்தி புகட்ட ஆரம்பித்தது பிரெஞ்சுப் படை. போரில் என்னவோ படிப்படியாக வெற்றிதான் என்றாலும் அந்த வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் நெப்போலியன் இல்லை. அதற்குக் காரணம் அவனது ஆசைக் காதல் மனைவி ஜோசஃபின். அவள் அவனைவிட 8 ஆண்டுகள் மூத்தவள். 14 வயது ஆண்பிள்ளைக்குத் தாய். கணவன் இறந்தபின் பாதுகாப்புக்கும் பணத்திற்கும் பெரும் புள்ளிகளை வளைத்துப் போட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். முதல் முறை பார்த்த போதே அவள் கட்டழகில் சொக்கிப் போன நெப்போலியன் அவளையே மனைவியாக்கிக் கொண்டான். தனக்கு மனைவியான பிறகும் அவள் பழைய வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தது அவனை ரணமாக்கிக் கொண்டே போனது. விளைவு, போர்வாளைத் தூரம் வைத்துவிட்டுப் போர்க்களத்திலும்கூட அவன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான். பல முறை அவள் மீது கோபம் வந்தும் முற்று முழுதாக அவளைவிட்டு விலக அவனால் இயலவில்லை. அவள் மீது அவனுக்கிருந்த மோகம் அவ்வளவு. அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்தது. ஐரோப்பாவையே தன் வாள்முனையில் பணிய வைத்த அந்த மாவீரனை தன் காலடியில் பணிய வைத்தாள் ஒரு பெண். இன்றும் உண்டு, உலகையே அசைத்துக் காட்டும் வல்லமை பெற்றிருந்தும் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சராசரி ஆசைகளில் கட்டுண்டு கையாலாகாதவர்களாய் கண்ணீர் வடிக்கும எத்தனையோ நெப்போலியன்கள்...)

ஆதிசிவன் கொண்டநெற்றிக்
கண்ணெனவே நானிருந்தேன்
நெற்றிக்கண்ணில் குளிர்காயும் வித்தை-அதில்நீ
நன்கு,கை தேர்ந்தஒரு தத்தை!

சிற்றிடையைத் தீண்டுமொரு
கற்றைக்குழ லாகமனம்
ஒற்றைநொடிப் போதினிலே தொட்டாய்-என்னை
ஓரவிழிப் பார்வையிலே சுட்டாய்!

சேர்த்துவந்த பாவமெனச்
சொல்வதற்கு ஏதுமிலை
பார்த்துவந்த பாவம்மட்டும் உண்டு-பதம்
பார்க்குதடி என்னையது இன்று!

மானமது கெட்டபின்பு
ஞாலமதில் கூடிவரும்
ஞானமெனச் சொல்லுமொரு உண்மை-அது
ஞாபகத்தில் இருந்துஎன்ன நன்மை?

மேகமுள்ள காலம்வரை
வானமழு தாகவேண்டும்
மோகமுள்ள காலமது வரைக்கும்-அடி
மானமுள்ள நெஞ்சுக்கிலை உறக்கம்!

வாசமலர்க் கூந்தலதை
நேசமுடன் கோதுகையில்
பாசக்கயி றாகிஉயிர் வாங்கும்-என்ற
உண்மையினைக் கூறவில்லை யாரும்!

சங்குமுலை காட்டிஅதில்
மகுடியினை வாசித்தாய்
அஞ்சுபுலன் புற்றெனவே கொண்டு-பாம்பாய்
ஆடுதடி ஆசைகுடி வந்து!

தவங்களையே கலைத்துவிளை
யாடுகின்ற காமனவன்
கணைகளுக்கு என்னுடைய தூக்கம்-அதைக்
கலைப்பதற்கா இல்லையொரு மார்க்கம்?

விடியலிலே வந்துதிக்கும்
வைராக்கியம் இருள்வந்து
படிந்துவிட்டால் போகுதடி தொலைந்து-மனம்
பல்லிளித்துச் சாகுதடி அலைந்து!

பஞ்சணையைப் பார்த்துவிட்டால்
அஞ்சுகணை பாய்ந்துவிட்டால்
உயர்திணைதான் யாருமில்லை இங்கு-இந்த
தத்துவத்தின் தலைமகன்நான் இன்று!

இவ்வுலகம் அவ்வுலகம்
என்றுரைக்கும் ஏழுலகும்
ஒன்றுகூடி நின்றதேனும் வெல்வேன்-என்
உள்ளம்பகை யானதென்ன செய்வேன்?

சத்திரத்தில் தூங்குமொரு
சந்நியாசி கண்டசுகம்
சித்திரத்தில் அச்சடித்த பெண்மை-அதன்
சங்கமத்தில் தோன்றவிலை உண்மை!

சாமத்து வெண்ணிலவு
ஈமத்துக் குடம்போல
தோன்றுதடி தலைமாட்டில் வந்து-கண்கள்
தூங்கவிலை தலைவிதியை நொந்து!

வாள்முனையில் வையகத்தை
மண்டியிட வைத்தவன்;பெண்
காலடியில் மண்டியிட்டான் என்று-வரும்
காலமென்னைத் துப்பும்விதி நன்று!

வஞ்சிமகள் வஞ்சமகள்
வளையலிடம் தோற்குமெனில்
வாளென்ன? வீரமென்ன? போடி-என்போல்
வையகத்தில் இல்லையொரு பேடி!

-----------------ரௌத்திரன்