Monday 27 April 2015

நெப்போலியன் அழுகிறான்!

(பிரான்சின் தலைமை ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற நெப்போலியன், தான் பிறந்த கோர்சிகாவின் மீதான இத்தாலி ஆக்கிரமிப்பை (இன்றைய இத்தாலியல்ல)முறியடிக்கப் படைதிரட்டி வருகிறான். ஏற்கெனவே நெப்போலியனிடம் தோற்று சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டதை மறந்த இத்தாலிக்கு மீண்டும் புத்தி புகட்ட ஆரம்பித்தது பிரெஞ்சுப் படை. போரில் என்னவோ படிப்படியாக வெற்றிதான் என்றாலும் அந்த வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் நெப்போலியன் இல்லை. அதற்குக் காரணம் அவனது ஆசைக் காதல் மனைவி ஜோசஃபின். அவள் அவனைவிட 8 ஆண்டுகள் மூத்தவள். 14 வயது ஆண்பிள்ளைக்குத் தாய். கணவன் இறந்தபின் பாதுகாப்புக்கும் பணத்திற்கும் பெரும் புள்ளிகளை வளைத்துப் போட்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். முதல் முறை பார்த்த போதே அவள் கட்டழகில் சொக்கிப் போன நெப்போலியன் அவளையே மனைவியாக்கிக் கொண்டான். தனக்கு மனைவியான பிறகும் அவள் பழைய வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தது அவனை ரணமாக்கிக் கொண்டே போனது. விளைவு, போர்வாளைத் தூரம் வைத்துவிட்டுப் போர்க்களத்திலும்கூட அவன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான். பல முறை அவள் மீது கோபம் வந்தும் முற்று முழுதாக அவளைவிட்டு விலக அவனால் இயலவில்லை. அவள் மீது அவனுக்கிருந்த மோகம் அவ்வளவு. அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வந்தது. ஐரோப்பாவையே தன் வாள்முனையில் பணிய வைத்த அந்த மாவீரனை தன் காலடியில் பணிய வைத்தாள் ஒரு பெண். இன்றும் உண்டு, உலகையே அசைத்துக் காட்டும் வல்லமை பெற்றிருந்தும் உள்ளிருந்து ஆட்டுவிக்கும் சராசரி ஆசைகளில் கட்டுண்டு கையாலாகாதவர்களாய் கண்ணீர் வடிக்கும எத்தனையோ நெப்போலியன்கள்...)

ஆதிசிவன் கொண்டநெற்றிக்
கண்ணெனவே நானிருந்தேன்
நெற்றிக்கண்ணில் குளிர்காயும் வித்தை-அதில்நீ
நன்கு,கை தேர்ந்தஒரு தத்தை!

சிற்றிடையைத் தீண்டுமொரு
கற்றைக்குழ லாகமனம்
ஒற்றைநொடிப் போதினிலே தொட்டாய்-என்னை
ஓரவிழிப் பார்வையிலே சுட்டாய்!

சேர்த்துவந்த பாவமெனச்
சொல்வதற்கு ஏதுமிலை
பார்த்துவந்த பாவம்மட்டும் உண்டு-பதம்
பார்க்குதடி என்னையது இன்று!

மானமது கெட்டபின்பு
ஞாலமதில் கூடிவரும்
ஞானமெனச் சொல்லுமொரு உண்மை-அது
ஞாபகத்தில் இருந்துஎன்ன நன்மை?

மேகமுள்ள காலம்வரை
வானமழு தாகவேண்டும்
மோகமுள்ள காலமது வரைக்கும்-அடி
மானமுள்ள நெஞ்சுக்கிலை உறக்கம்!

வாசமலர்க் கூந்தலதை
நேசமுடன் கோதுகையில்
பாசக்கயி றாகிஉயிர் வாங்கும்-என்ற
உண்மையினைக் கூறவில்லை யாரும்!

சங்குமுலை காட்டிஅதில்
மகுடியினை வாசித்தாய்
அஞ்சுபுலன் புற்றெனவே கொண்டு-பாம்பாய்
ஆடுதடி ஆசைகுடி வந்து!

தவங்களையே கலைத்துவிளை
யாடுகின்ற காமனவன்
கணைகளுக்கு என்னுடைய தூக்கம்-அதைக்
கலைப்பதற்கா இல்லையொரு மார்க்கம்?

விடியலிலே வந்துதிக்கும்
வைராக்கியம் இருள்வந்து
படிந்துவிட்டால் போகுதடி தொலைந்து-மனம்
பல்லிளித்துச் சாகுதடி அலைந்து!

பஞ்சணையைப் பார்த்துவிட்டால்
அஞ்சுகணை பாய்ந்துவிட்டால்
உயர்திணைதான் யாருமில்லை இங்கு-இந்த
தத்துவத்தின் தலைமகன்நான் இன்று!

இவ்வுலகம் அவ்வுலகம்
என்றுரைக்கும் ஏழுலகும்
ஒன்றுகூடி நின்றதேனும் வெல்வேன்-என்
உள்ளம்பகை யானதென்ன செய்வேன்?

சத்திரத்தில் தூங்குமொரு
சந்நியாசி கண்டசுகம்
சித்திரத்தில் அச்சடித்த பெண்மை-அதன்
சங்கமத்தில் தோன்றவிலை உண்மை!

சாமத்து வெண்ணிலவு
ஈமத்துக் குடம்போல
தோன்றுதடி தலைமாட்டில் வந்து-கண்கள்
தூங்கவிலை தலைவிதியை நொந்து!

வாள்முனையில் வையகத்தை
மண்டியிட வைத்தவன்;பெண்
காலடியில் மண்டியிட்டான் என்று-வரும்
காலமென்னைத் துப்பும்விதி நன்று!

வஞ்சிமகள் வஞ்சமகள்
வளையலிடம் தோற்குமெனில்
வாளென்ன? வீரமென்ன? போடி-என்போல்
வையகத்தில் இல்லையொரு பேடி!

-----------------ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.