Sunday 20 December 2015

அவளுக்கு மட்டும்!



சிலுவை பிரித்துப் புதியதோர் வாழ்விற்(கு)
அழகேநீ வாசல் அமைத்தாய் -வலித்துக்
கிடந்தநெஞ் சுக்கு,வரம் தந்தாய்; புளித்துக்
கிடந்தவாழ் வுக்கும் பொருள்.

வில்லொடித்த ராமன் விலாவொடித்தாள் சீதையவள்
கள்ள விழியால் கணைதொடுத்தே! -செல்லப்
பனிப்பார்வை நீவீசிப் போனாலும் என்னைத்
தணலாக வாட்டு தடி.

பாதி கொடுத்தான் பரமசிவன் பார்வதிக்கு
காதல் கலைமகளே கட்டழகே -மீதமின்றி
மொத்தமாய் நான்தந்தேன்; சாவில் தெளியாத
பித்தமே தந்தாய் எனக்கு.

விடிந்தால் நிலவை மறக்கலாம் வானம்
மடிந்தாலும் மண்மீது வாழ்வு -முடிந்தாலும்
ஆகுமோ உன்னை மறக்க? மறந்தாலே
வேகுமோ எந்தன் உடல்?

முந்தானை நீக்கியுன் மார்புக்கு மத்தியிலே
செந்தேனே செம்மலரே செப்பழகே -செந்தமிழால்
கொஞ்சிக் கவிபாடி முத்தம் பதிக்காமல்
நெஞ்சம் அடங்கா தடி.

கடல்குடித்துத் தள்ளாடும் கார்மேகம் போலுன்
மடலெடுத்த செவ்வாயின் எச்சில் -அடியழகே
நித்தம் பருகாமல் நெஞ்சம் உருகாமல்
ரத்தம் தணியா தினி.

ஒன்றையே எண்ணி உருகி ஒருமனதாய்
ஒன்றில் லயித்தல் தவமென்றால் -நன்றுதான்
தப்பல்ல ஈதும் தவமேதான்; கூடலே
ஒப்பில்லா தெய்வ சுகம்!

முன்னழகைக் கண்டுவிட்டால் மூச்சுமே முட்டுதடி
பின்னழகில் திக்குதடி பேச்சுமே! -கண்ணழகை
மீனென்றே சொன்னவன்யார் கொக்கைப்போல் அல்லவா
என்னெஞ்சைக் கொத்து கிறாய்?

பாதியில் வந்தாலும் பைந்தொடியே என்வாழ்வின்
ஆதியும் அந்தமும் நீயடி -சோதித்
திருமுகத்தைக் கண்டு கிடப்பது போலே
ஒருசுகத்தைக் கண்ட திலை.

நிலவுநீ வாராமல் என்வானில் என்றும்
பொழுது விடியாது கண்ணே! -எழுதும்
கவியெல்லாம் உந்தனது காலடிக்கே செய்தேன்
அவையெல்லாம் அர்ப்பண மே!

தேரெடுத்து வாராத தெய்வ மகளே!உன்
பேரெடுத்துச் சொன்னால் புதுச்சுகமே! -ஏறெடுத்தும்
பார்ப்பதிலை இன்னொரு பெண்ணை உனையன்றி
ஏற்பதிலை நெஞ்சம் இனி.

மீனாட்சி நீயன்றோ சொக்கனும் நானன்றோ
மானாட்சி செய்யும் மடக்கொடியே!-தேனாட்சி
செய்யும் தமிழும் எனதன்றோ? நான்பாட
வையம் வணங்கி வரும்.

சொடுக்குமே போட்டுத்தான் சொப்பனமே நெஞ்சு
துடிக்குதடி; உன்னைச் சிறையே -எடுக்காமல்
விட்டு விடுவேனோ? காத்திரு நான்தாலி
கட்டத்தான் உந்தன் கழுத்து.

-----ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.