Sunday 26 April 2015

த.ஜெயகாந்தன்

அந்தியில் வானம் அனுதினம் காண்பார்
    
சுந்தர நிலவெனச் சொல்வார்!
விந்தையென் றேதம் விழிகளை விரிப்பார்
    
தம்குடில் விளக்கினை எண்ணார்!
கந்தலைப் போற்றும் கலதிகள் கூட்டம்
   
களங்கமில் பட்டினைத் தீண்டார்!
மந்திகள் வாழும் மண்ணிது வன்றோ
   
மயிலினை மதிப்பவர் ஏது?

சில்லரைச் சப்தம் வீறிடும் உலகில்
   
சத்தியம் பேசுதல் பாவம்
கல்லறை தன்னில் நல்மறை நூலை
   
ஓதுதல் போலொரு சாபம்
வல்லரைப் போற்றி வாழுமோர் புவியில்
   
வறிஞரைப் பேசிய கோலம்
புல்லுரை பனியின் பவித்திரம் அறியா
   
புல்லினும் தாழ்ந்தவர் ஞாலம்!

பாத்திரம் படைக்கும் பாங்கினை அறியா
    
பேதையர் புகழினைப் பெற்றார்!
நேத்திரம் கெட்டோர் நலம்பெற வந்தோர்
    
நாயினும் கீழ்மையே உற்றார்!
ஆத்திரம் பொங்க அழுகிறேன்; இந்த
    
அறிவிலா தமிழகந் தன்னில்,
மாத்திறம் கொண்ட மாசிலார் பிறப்பைத்
    
தவிர்த்திடு என்தமிழ்த் தாயே!


-----------ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.