Sunday 26 April 2015

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்!

ஆசை உன்மீது
     
அணுவளவு குறைந்தாலும்
ஓசை இல்லாமல்-என்
     
உயிர்பிரிய வேண்டுமடி!

ஒருசொட்டுக் கண்ணீர்
     
உன்கண்ணில் வழிந்தாலும்
மறுசொட்டுக் கண்ணீர்-என்
     
பிணத்தில்விழ வேண்டுமடி!

என்மார்பில் நீசாய
     
உன்மார்பில் நான்சாய
இருநெஞ்சின் துயரங்கள்
     
இடம்மாற வேண்டுமடி!

நாதமணிக் கொலுசோடு
     
நடமாடும் நடமாடும்-உன்
பாதமலர் நானெடுத்து
    
முத்தமிட வேண்டுமடி!

இலைக்குக் காம்பெனவே
     
இளைத்திருக்கும் மெல்லிடையை
வளைத்து முப்போதும்-நான்
     
விளையாட வேண்டுமடி!

மொட்டு இதழ்குடித்து
     
முரலும் வண்டினைப்போல்-உன்
பட்டு இதழ்குடித்து-நான்
      
பசியாற வேண்டுமடி!

என்கையில் உன்ரேகை
     
உன்கையில் என்ரேகை
இடம்மாற மஞ்சத்தில்-நாம்
     
இளைப்பாற வேண்டுமடி!

என்னிதயம் மோகத்தில்
    
எரிகின்ற நேரத்தில்-உன்
இதழெச்சில் தனையூற்றி
    
நீயணைக்க வேண்டுமடி!

கட்டி அணைத்தெடுத்துக்
     
கலவி முடிக்கையில்-நாம்
தொட்டுக்கொண்ட இடமெல்லாம்
     
தேனூற வேண்டுமடி!

முப்போதும் உன்மார்பில்
    
முத்தமிடும் பொன்தாலி
சிலபோது சிலபோது
    
நானாக வேண்டுமடி!

தாயூட்டும் ஒர்சுகம்
    
தாயோடு முடியாமல்
நீயூட்டும் வேளையிலும்
   
நீண்டுவர வேண்டுமடி!

கண்ணீர் வந்தாலும்
     
காமம் வந்தாலும்
பெண்ணிற் பேரழகே-உன்
    
முந்தானை வேண்டுமடி!

வயதாகிப் போனாலும்
    
வண்ணத் திருமயிலே!-உன்
வாயூறும் எச்சிலுக்கு
    
நான்வழிய வேண்டுமடி!

யார்செத்து யார்அழுக?-என்ற
   
கேள்விக்கு இடம்வேண்டாம்
ஊர்அழுக ஒன்றாக-அடி
    
நாம்போக வேண்டுமடி!


-----------ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.