Sunday 26 April 2015

நெஞ்சறிந்து சொன்னீரோ?

மானத்தமிழ் வானத்தெழு ஞானக்கதி ரவனை
கானக்கலை வாணிக்கர வீணைக்கிணை யவனை
நாணத்தனை தானின்றியே வீணிற்பழி யுரைத்த
ஈனத்தமி ழானின்புலை நாவைத்துணித் திடடா!

ஆணென்றவர் அலிஎன்(று)அவர் நாணித்தலை குனிய
ஏனென்றுடன் ஏறென்றெழு வீரக்கலை மகனை
பூனைக்கொரு பிடரிம்மயிர் முளைத்தக்கதை யதுவே
காணிங்கிவர் கனைக்கும்வகை என்றேநகைத் திடடா!

தமிழின்தலை தமிழன்தலை தரணித்தலை மிசையே
நிமிரத்தலை நிமிரும்தளை நிதமும்களை அறுக்க
நிமிரும்தலைத் தமிழின்தலை மகனின்தலை குனிக்க
நிமிரும்தலை எதுவாயினும் துணிக்கத்தலை எடடா!

தமிழுக்குயிர் தமிழுக்குடல் தமிழுக்குறு பொருளை
அமைவாகவே வைத்தேதினம் அணுவோடுதான் கலந்தே
இமையாய்மொழிக் கென்றேநிதம் இமையாவிழி யாகக்
குமைந்தான்தனைக் குரைத்தார்தமை உமிழாவிடில் தகுமோ?

யாரேதமிழ் அறியான்?அட யாரேமொழி தெரியான்?
நேரேதமிழ் மகள்தான்தவம் கிடந்தேஅவ ளடைந்த
சீராய்அவ தரித்தான்தனை  இழித்தார்இவர் நெஞ்சைக்
கூறாய்;இரு கூறாய்உடன் பிளவாவிடில் முறையோ?

திக்கற்றவர் திசையற்றவர் துயரற்றொரு வாழ்வு
மிக்குற்றவர் மகழ்வுற்றிட மனம்வைத்ததில் தினமும்
நெக்குற்றவர் நெகிழ்வுற்றவர் தமைப்போற்றியே காக்கும்
வக்கற்றதோர் தமிழர்க்குவாய்த் திமிருக்கொரு குறையோ?

எழுத்தாளனே இவன்தானென எடுத்தாளவே பிறந்தோன்
மழுவாளென மொழிவாளினை மடமைக்கெதிர் பிடித்தோன்
புலித்தோலினில் நடித்தோரிடை புலியாகவே நடந்தோன்
பழிபேசிடும் தமிழாஅட இவனன்றிவே றெவனே?

இருந்தார்பல எழுத்தாளரே இவன்முன்னமும் இங்கே
விருந்தாய்வகை வகையாய்க்கதை வடித்தார்எனும் போதும்
இருள்வானிலே விண்மீன்களைப் போலேஅவர் இருந்தார்
ஒருசூரியன் எனவேஒரு ஜெயகாந்தனே எழுந்தான்!
  
"என்தாய்மொழி என்தாய்மொழி" என்றேபெரு மிதமாய்
விண்தாவியே குதித்தேஒரு பறைகொட்டிடும் தமிழா!
முன்வைக்கிறேன் ஒருகேள்வியை இதற்குப்பதில் கூறு
மண்மேலொரு மொழிதான்அடை கின்றப்புகழ் எதனால்?

லிபியோ?வெறும் லிபிதான்எனில் எதில்தான்இலை லிபியே?
லிபியால்ஒரு மொழிதான்புகழ் பெறுமோ?கதி யுறுமோ?
தபம்போலவோர் எழுத்தாளனே உருவாக்கிடும் படைப்பே
சபைஏறியே புவிமேல்மொழி நிலைக்கும்வகை செய்யும்!

"மதியார்ந்ததோர் எழுத்தாள(ர்)எம் மொழிதன்னிலும் பிறப்பார்
அதனாலெவர் மொழியாயினும் அவர்மாண்பினைப் புகழ்வோம்"
இதைச்சொன்னவன் இதம்சொன்னவன் இவனோதமிழ்த் துரோகி?
கதைப்பேசியே கழுத்தறுப்பவர் அவரேதகும் உமக்கு!

வாழும்வகை கூறித்தினம் வாடாவகை தந்தோர்
வாழும்வரை மட்டும்மிலை செத்தாலுமே அந்த
மேலோரவர் அருமைச்சிறி தளவேனு(ம்)நாம் உணரோம்!
காலம்பதில் சொல்லும்;ஜெய காந்தன்பெயர் வாழும்!


(சம்ஸ்கிருத மொழியை உயர்வாகப் பேசியதற்காக "தமிழ் தெரியாதவன்" என்றும் "தமிழ்த் துரோகி" என்றும் தூற்றப்பட்ட எனது அபிமான எழுத்தாளன் ஜெயகாந்தனுக்கு...)

-----------------ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.