Sunday 26 April 2015

செத்துவிட மாட்டேன் போ!

தொட்டுத் தொடராத உன்பந்தம், என்நெஞ்சைச்
சுட்டெரிக்கும் தீப்பந்தம் ஆனதடி -கட்டழகே!
முத்தமிட்ட ஞாபகங்கள் முள்ளாகத் தைத்தாலும்
செத்து விடமாட்டேன் போ!

மடிதந்தாய் என்றே மகிழ்ந்திருந்தேன்; மீளா
இடிதந்தாய்; கைக்கழுவி இன்று - விடைதந்தாய்
நித்தம் இளைத்து நடைபிணமாய் ஆனாலும்
செத்து விடமாட்டேன் போ!

விக்கித் தவிக்கின்ற வேளை குடத்துநீர்போல்
பக்கத்தில் வந்து, பருகுமுன் - கைக்கெட்டா
மைத்த முகில்போல் கலைந்தின்று போனவளே
செத்து விடமாட்டேன் போ

காலத்தின் கட்டளையோ கல்நெஞ்சால் நீங்கினையோ
ஞாலத்தில் உள்ளவரை கன்னியுன் - கோலத்தை
நித்திரை யில்கூட நான்மறவேன்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!

மறக்க மனம்வாங்கி வந்த,உனை யெண்ணி
இறக்க மனம்வாங்கி வந்தேன் - சிறுக்கியுன்
பித்தம் தொலையாத பேய்மகன்தான் என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!

இருண்டது வாழ்வென்(று) இனியவளே நெஞ்சம்
மருண்டு தவிக்கையில் நீயோ - இருவிழியைக்
குத்திக் குருடாக்கிப் போகின்றாய்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!

பாட்டுக் குயில்பறந்து போனபின் னால்வெறுங்
கூட்டைச் சுமக்கும் மரம்போல - ஏட்டிலுன்
சித்திரத்தைத் தீட்டும் சுகமொன்றே கொண்டாலும்
செத்து விடமாட்டேன் போ!

பற்கள் படிந்து படியாமல் நான்கடிக்கும்
சொர்க்கச் சுகங்கேட்டு விம்மிவரும் - சிற்றிடைமேல்
தத்தையிள மார்பாய்த் தவிக்கின்றேன்; என்றாலும்
செத்து விடமாட்டேன் போ!

இணையற்ற காதல் நமதென்றாய்; இல்லை
இணையற்ற காதல் எனதே! - "இணை"யற்ற
பித்தப் பெருங்காதல் என்நெஞ்சில் தந்தவளே!
செத்து விடமாட்டேன் போ!

நீயென்னைப் பார்த்துச் சிரித்த சிரிப்பெல்லாம்
ஊரென்னைப் பார்த்துச் சிரிப்பதற்கோ? - யாரென்னை
நித்திலமே இங்கு சிரித்தால் உனக்கென்னெ?
செத்து விடமாட்டேன் போ!

வீட்டில் விளக்கேற்ற வந்தவள், என்தலை
மாட்டில் விளக்கேற்றிப் போகின்றாய்! - தீட்டுப்போல்
மொத்தமாய் என்னைத் தலைமுழுகிப் போனவளே!
செத்து விடமாட்டேன் போ!

பூநீயும் இல்லாமற் போனதனால், என்வாழ்க்கை
நாணயம் இப்போது செல்லாக்கா(சு) - ஆனதடி
தித்தித்தக் காதல் திகட்டித்தான் போனதுவோ?
செத்து விடமாட்டேன் போ!

வண்டைக் குடைகின்ற வண்ண  மலர்முகம்தான் 
தொண்டைக் குழிக்கும்,நெஞ் சுக்குமுயிர்த் - திண்டாடித்
தத்தளிக்கும் போதுமென் கண்ணில் வருமேனும்
செத்து விடமாட்டேன் போ!

கூட்டிலுயிர் ஆனவளே! கொஞ்சியுனை வாழவரங்
கேட்டுவர  வில்லையடி; நீயிங்கு - கேட்டுவந்தாய்!
புத்தம் புதுவாழ்வில் பூரித்து நீவாழ்க!
செத்து விடமாட்டேன் போ!

என்றைக்கு நான்சிரித்தேன் என்வாழ்வில் ஏந்திழையே
இன்று புதிதாய் அழுவதற்கு? - நன்றிங்கு
பத்துடனே ஓராறு பெற்றுநீ வாழ்க;நான்
செத்து விடமாட்டேன் போ!

மாதமொரு பத்து, மகனாய் மணிவயிற்றில்
மாதொருத்தி என்னைச் சுமந்தாளே - போதுமடி
இத்தரணி மீதினிலே இன்னோர் சுகம்வேண்டாம்
செத்து விடமாட்டேன் போ!

------------ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.