Monday 27 April 2015

அடியே கேணச் சிறுக்கி!

மனச கெடுக்குறாளே
மயக்கம் கொடுக்குறாளே
சும்மா கெடந்த சங்க
ஊதிக் கெளப்புறாளே!

சிரிச்ச சிரிப்புக்கு
அர்த்தம்தான் புரியலையே
சிறுக்கி மவளுக்கு
எதாச்சு தெரியலையே!

எக்குத் தப்பாக
இன்னிக்கிச் சிரிக்கிறாளே
காத்துக் கருப்பேதும்
உள்ளுக்குப் புகுந்துருச்சோ?

அவள புடிச்ச பேயி
ஆண்டவனே அவளோட
என்னையும் சேத்தில்ல
ஆட்டிப் பாக்குது!

கோழிக் கொழம்புக்கு
கமகமன்னு அரச்சி
அம்மிய வழிப்பாங்களே
அந்தப் படிக்கில்ல,

மிச்ச சொச்சமின்னு
விட்டு வெக்காம
மொத்தமா என்மனச
கண்ணால வழிக்குறா!

இவ,
வெளங்காம பாத்தாலே
வாலு மொளச்சிமனம்
அலங்கா நல்லூரு
காளையா குதிக்குமே,

இப்ப,
வில்லங்கமா இல்ல
வெறிச்சிப் பாக்கறா!
வெவரம் தெரியலையே
வெடவெடன்னு வருதே!

ஆழம் பாக்கறாளோ?
ஆச வந்துருச்சோ?
வேப்ப மரத்துக்கே
வேப்பல அடிக்குறாளே!

ஜல்லிக் கட்டுக் காளையாட்டம்
ஜெகத்தையே சுத்திவந்தேன் -இவ
செக்கு மாடாக்கி
விட்ருவா போலிருக்கே!

கணக்குப் புரியலையே
களிமண்ணு மண்டைக்கு!
மினுக்கு மினுக்குன்னு
மினுக்கிக்கிட்டுப் போறாளே!

கல்லு மனச இவ
கரைக்குறது மட்டுமில்ல
கேப்பக் களியாட்டம்
கிண்டிருவா போலிருக்கே!

எலையத் தொட்டாலே
வேர்வரைக்கும் காச்சல்வரும்
வேரைத் தடவறாளே -இனி
வெளங்கின மாதிரித்தான்!

முருங்க மரமாட்டம்
மனசு ஆடுதே!
முறுக்குக் கொழாவாட்டம்
மனசப் புழியுறாளே!

மடக்கிக் கேப்போம்னா
மானத்த வாங்கிடுவா -இவகிட்ட
வாய்குடுத்து மாட்டிக்கிட்டா
வக்கீலுக்கே வக்கீல் வரணும்!

நாலூரு நடுநடுங்க
நாக்கெல்லாம் மச்சம் வாங்கி
வேலூரு ஜெயில் வரைக்கும்
வெலவெலக்க வச்சவளே

பல்லு உதிருமுன்ன
சொல்ல உதிர்த்துப்புடு
நல்ல சொல்லுன்னா
                 நாலு புள்ள பெத்துக்கலாம்!


                    ------------------ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.