Sunday 26 April 2015

ஈதுனக்கு அழகாமோ?

போதுமே எங்கள் பொன்தமிழ்க் குலத்தர்
      
பட்டபல் துயர்களும் இங்கே!
நீதமே இல்லை நீயுமே காக்கும்
      
நீண்டதோர் பொறுமையே சொன்னேன்!
ஏதமே நாங்கள் ஏதிவண் புரிந்தோம்?
      
எடுத்துநீ புகலுதல் வேண்டும்!
வேதமே கேட்டுன் செவிகளுக் கெங்கள்
      
வேதனை மொழிபுரிந் திலையோ?

கல்லினில் வடித்துக் கோவிலில் வைத்தக்
     
கணக்கதும் பிழையென வாச்சோ?
கல்லினில் வடித்தும் கடவுளாய்க் கண்ட
     
காட்சியும் பொருளிலா தாச்சோ?
கல்லென வேநீ கண்திற வாமற்
     
கிடப்பதே முடிவென வானால்
கல்லறை தனக்கும் கோவிலுக் கும்பின்
     
வேற்றுமை ஏதுள திங்கே?

அஞ்சலென் றுரைக்கும் அன்புடைக் கரங்கள்
      
அசைவினை இழந்ததும் ஏனோ?
சஞ்சல மென்றுன் சந்நிதி வந்தோம்
      
சாந்திநீ தரமறுப் பாயோ?
தஞ்சமென் றுன்றன் தாள்பணிந் திட்டோம்
      
தெய்வமே கண்திற வாயோ?
வஞ்சமில் லாரை வாட்டியே பார்த்தல்
      
வேதனே ஒருவிளை யாட்டோ?

நம்பினார்க் கெடுவ தில்லையென் றுரைத்த
     
நான்மறை நீர்த்தவோ இன்று?
வெம்பினார் நெஞ்சம் தெம்பினாற் சிரிக்க
     
விழியினாற் காண்பதும் என்று?
அம்பினாற் கொய்த ஐயிரு தலையன்
      
மீட்டுமே பிறந்துளான் இங்கே!
நம்பியாய் வந்த நாயகா உன்றன்
      
நல்லவ தாரமும் எங்கே?

வேண்டாம்,

"
தர்மமே யழிந்து தரணியின் மீதில்
      
அதர்மமே ஓங்கிடும் போது
கர்மமே முடிக்க கனிவுடன் அந்நாள்
      
கல்கியென் றுதிப்பனே, முற்றாய்ச்
சர்வமே துடைத்துச் சதுரிடு வேனஃ
      
தே,கலி யுகமுடி வென்னும்
மர்மமே" யென்றாய் மாலவா அச்சொல்
      
மெய்யென வாகிலும் நன்றே!

தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
     
தரிகிட தரிகிட வென்றே
கருகிட ஞாலம் கலங்கிடக் கோலம்
     
கண்ணனே தரித்துநீ, தீயோர்
நெறிகெட, ரத்தம் பருகிட, நல்லோர்
     
உருகிட, உருவெடுத் தே,வா!
தரிகிட தத்தோம் தரிகிட தத்தோம்
     
தரிகிட தரிகிட தத்"ஓம்"!    


---------ரௌத்திரன் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.