பேரினைப் பாடப் புகழ்பாட, விண்தொட்ட
சீரினைப் பாடநினைந் தேனையோர் - நேரிணை
இல்லா தவனே இழவினைப் பாடென்று
சொல்லாமற் சொன்னதென் சொல்?
திறத்தினைப் பாடத் திசையெட்டு மோங்கு
சிறப்பினைப் பாடநினைந் தேனை -இறப்பினைப்
பாடிப் புலம்பென்று கூறி இருகண்ணை
மூடிமறைந் தால்என் முறை?
நடைபாட, ஈர்க்கும் நளினமிகு பேச்சுப்
படைபாட நின்றவன்நீ பெற்ற - விடைபாடி
ஆவென் றழுதரற்றி என்கவிப்பூ பாடையில்
தூவெனத் தூவிடவோ சொல்.
எழில்பாட வந்துன் எதிர்பாட வீரக்
கழல்பாட நின்றேன்;பேய்க் காற்றின் - சுழல்பாட்டைக்
கேட்குமோ பூவனம்? கேட்கும் வலியுண்டோ?
தாக்குந் துயர்அத் தகை!
கம்பீர மென்றுங் குறையாமற் கர்ச்சிக்கும்
உன்வீரம் பாடநினைந் தேன்ஐயோ -வெம்பாரம்
ஏற்றியென் நெஞ்சை எரிக்கவே நீயின்று
கூற்றொடுஞ் சென்றதென் கூறு?
எச்சில் விழுங்கும் எரிமலையும் உன்பேரை
உச்சரித்தால் என்றே கவிபாடி - உச்சி
முகர விருந்தவென் நெஞ்சைப் பிரிவால்
தகர்ப்பதெவ் வாறு தகும்?
எழுத்தென்று சொன்னால் இதுவே; உலகில்
எழுத்தாளன் என்றால் இவனே! - முழுத்தகுதி
பெற்றவன்வே றாரென்று பேசவே வைத்தவெம்
கொற்றவ! போனாயோ இன்று?
வசைபாடி வந்தவர் வாய்விட் டலற
இசைபாடி வந்தோர் இடிய - அசைந்தாடி
பூந்தேரில் ஏறிப் புறப்பட்டாய்; மீண்டுமுனை
வேந்தனே காண்பதெவ் வாறு?
மீசை முறுக்கும் கரமெங்கே? நற்றமிழை
வீசிச் செருக்கும் குரலெங்கே? - நீசர்
குடலைக் கலக்குமப் பார்வையெங்கே? யென்று
கடலை வடிக்குதே கண்.
பெட்டையும் ஏந்துவான் போர்வாள்; எழுதுகோலைத்
தொட்டெழுத வேண்டுமடா பேராண்மை! - எட்டுதிசை
எங்குமே இஃதை எழிலுற சாற்றியவென்
சிங்கமே மாயுமோநின் சீர்?
நிமிரத் தமிழ்க்குலம் நின்றவன் போனாய்
அமரப் பதவி அடைந்தாய் - குமுறும்
மனத்தினை எவ்வாறு தேற்றுவேன்? எம்தலைவ!
உனக்கென்ன போகின்றாய் போ!
(என் அபிமான எழுத்தாளன் ஜெயகாந்தனின் மரணத்திற்காக எழுதியது)
-----------ரௌத்திரன்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.