Sunday 26 April 2015

நான் கவிஞன்!

தேசியக் கொடியில் அல்ல
எம்
தேசத்துச் சோதரிகளின்
தாவணி நூலறுந்தாலும்
என் நரம்புகள் புடைக்கும்....

கலியுகத்துக்
கண்ணகிகள் அல்ல
விருப்பமின்றி உருவப்படுவது
ஒரு
வேசியின் புடவையென்றாலும்
என் உடல் அம்மணமாகும்...

முப்புரம் அல்ல
எப்புரம் அதர்மம்
எக்காளமிட்டு
எகிறிக் குதித்தாலும்
எனக்கு நெற்றிக்கண் முளைக்கும்....

பொய்கள் எப்போதெல்லாம்
பல்லக்கில் ஏறி
பவனி வருகின்றனவோ
அப்போதெல்லாம்
என் உடல்
பாடையிலேறும்....

"
அம்மா! பசிக்கிறதே!"
என்று
எவன் வயிறு கலங்கினாலும்
அவனுக்காய் என் இருதயம்
பிச்சைப் பாத்திரமாய் நீளும்.....

எங்கெல்லாம்  பொய்யின் முன்
வாய்மை
வாய்பொத்தி நிற்கும் நிலை
வருகிறதோ
அங்கெல்லாம்
என் உடல் கூனிக் குறுகும்...

என்று
குனிந்து உழைத்தவன்
குடி நிமிர்கிறதோ
அதுவரை என்
முதுகுத் தண்டும்
முறிந்துகொண்டே இருக்கும்...

எப்போதெல்லாம்
எம் விவசாயிகள்
வேர்வையைப் பாய்ச்சி
வறுமைப் பயிரை அறுக்கிறார்களோ
அப்போதெல்லாம்
என் கழுத்தும் அறுபடும்...

எந்த மூலையில்
எந்த ஏழை வீட்டு அடுப்பு
எரியாவிட்டாலும்
கட்டாயம்
என் வயிறு எரியும்...

எப்போதெல்லாம்
மானுடத்தை
இருள் கௌவிக்கொள்கிறதோ
அப்போதெல்லாம்
அங்கே தீப்பந்தமாய்
என் சடலம் எரியும்.....

ஏனென்று கேட்கிறீர்களா?

ஏனென்றால்

"
நான் கவிஞன்"



-----------
ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.