Monday 27 April 2015

இளைஞருண்டு!

தாய்மொழி என்று சொல்லல்
    
தலைகுனி வாக எண்ணி
வாய்மொழி தன்னில் கூட
    
வைத்திட மறுக்கும், ஈன
நாய்களே மலிந்து விட்ட
    
நாட்டிலே தமிழை மூச்சாய்
மாய்ந்திடுங் காலம் மட்டும்
    
மதித்திடும் "அருவி" வாழ்க!

(
வேறு)

கொள்ளை யடித்து வாழ்வதொன்றே
     
கொள்கை யென்று கொண்டுவிட்ட
புல்லர் கூட்டம் வாழ்வதற்கே
     
புலர்ந்த பாதை அரசியலாய்ச்
சொல்லு கின்ற கருத்தழிய
     
சழக்கர் தம்மின் சங்கறுக்க
நல்ல தான இயக்கமொன்று
     
நாட்டு கின்ற "அருவி"வாழ்க!

(
வேறு)

காவிகட்டும் கள்வரெலாம்
       கைத்தொழும் கடவுளென்று
              ஆகி விட்டால்
நாவிலே மட்டுமுண்மை
       நாட்டுகின்ற கலையறிந்தோர்
                தலைவ ரென்றால்
ஆவதென்ன உண்டுஇங்கு?
       ஆவியது போம்வரைக்கும்
                 மக்க ளெல்லாம்
கூவியழத் தான்வேண்டும்
        கூழுமின்றி கஞ்சியின்றி
                 உண்மை யன்றோ?

நரித்தனம் புரிந்துவாழும்
        நாய்களுக்குப் பிறந்தவர்கள்
                    இந்நாள் மட்டும்
தரித்திரம் பிடித்ததுபோல்
         தமிழகத்தை ஆண்டுவந்த
                   தருத லைகள்
சரித்திரம் படைப்பமெனச்
         சுரண்டிவந்த செய்கையெலாம்
                   சந்தி தோறும்
சிரித்திடச் செயவேண்டும்
         சத்தியம் வாழவேண்டும்
                     வருக நீயே!

பாயுமின்றி படுக்கையின்றி
         பட்டபாடு யாவினுக்கும்
                  பலனைக் கேட்க
வாயுமின்றி வழியுமின்றி
         வழிகாட்ட ஒருவனின்றி
                    விழிக்கும் மக்கள்
மாயுகின்ற விதியதனை
          மாற்றவேண்டும் அவர்வாழ்வு
                     மலர வேண்டும்
பாயிரத்தை நீயெழுது
          பற்றிவர இளைஞருண்டு
                     தோல்வி யில்லை!

(
திரு. தமிழருவி மணியன் அவர்கள் காந்திய அரசியல் இயக்கம் தோற்றுவித்த போது வாழ்த்தி எழுதியது)


----------ரௌத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.